Tuesday, April 26, 2011

சாய் பாபாவோடு நாத்திகத்தையும் குழியில் புதைத்துவிடுங்கள் கலைஞரே

சாய் பாபாவோடு நாத்திகத்தையும் குழியில் புதைத்துவிடுங்கள் கலைஞரே

               மரணம் எல்லோருக்கும் பொதுவானது, ஆத்திகம் வளர்த்த அவதாரங்களாகட்டும், தேவ தூதர்களாகட்டும், தன்னையே கடவுளாக அறிவித்துக் கொண்டவர்களாகட்டும், நாத்திகம் காத்தவர்களாகட்டும் (நன்றி ஆதி) எல்லோரையும் மரணம் சமமாகவே தழுவியிருக்கிறது, தர்க்கங்களை விட்டுப் பார்ப்போம், இதயம் துடிப்பதை நிறுத்தி, ரத்தம் தனது ஓட்டத்தை நிறுத்தி, மூளை வலியை, உணர்ச்சியை உணர மறுத்து, 21கிராம் உடல் எடையை இழந்தே அத்தனை பேரும் மரித்துப் போயிருக்கிறார்கள். மூன்றாம் நாள், உதிர்ந்த இலை இதுவரை தழைத்தது இல்லை.
மூப்பாலும், உடல் செல்களின் புதுப்பிக்கும் வேகமும் குன்றிப் போய் மரணிப்பது புதிது இல்லை, இதை எந்த மருத்துவராலும் தடுத்துவிட முடியாது, இப்படி இறப்பதை எந்த மருத்துவராலும் வெல்லவும் முடியாது, குறைந்தது இன்று வரை. மூப்பால் அவதிப்பட்டு மருத்துவமனையில் கிடத்தப்பட்டுக் கிடக்கும்  ஒரு மணிதரை சீக்கிரம் உடல்நிலை தேறி வர தன் கருத்தை வாழ்த்தாகவோ விருப்பமாகவோ தெரிவிப்பது இயற்கையான ஒன்று.
பழுத்த ஆத்திகவாதி இறைவன் அருள் உன் மீது படட்டும், உடல் நிலை தேறியதும் திருப்பதி/வேளாங்கன்னி/நாகூர்/xxx/yyy/zzz/aaa சென்று வா என்று பேசுவது வாடிக்கை. அந்நிலையிலும் அவர்கள் தான் கொண்ட கொள்கையை இழக்க மாட்டார்கள். (அற்ப வயதில் இறந்து போன ஒருவனுடைய/ஒருத்தியுடைய குடும்பத்தில் சிலர் விரக்தியில், கடவுள் நம்பிக்கை இழந்து தவிப்பார்கள், அது வாடிக்கை, சில பல ஆண்டுகள் கழித்து ஏதேனுமொரு புனித தலத்திற்குச் சென்றால், அவர்களுடைய அந்த நம்பிக்கையற்ற தன்மையும் போய் விடும்.) ஆனால், ஒரு நாத்திகன்/பகுத்தறிவாளனாகத் தன்னைக் காட்டிக் கொள்பவன் என்னச் சொல்லுவான்? நான் பார்த்தவர்கள், விரைவில் உடல்நலம் தேறுவாய், மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடு, விரைவில் உடல்நலம் தேறும் என்று கூறுவார்கள். எழுபத்து மூன்று வயதிலும் நாத்திகம் காத்த என் பாட்டன் அவன் நோய் தெரிந்த போதும் திருக்குறளின் நிலையாமை அதிகாரத்தை எங்களைப் படிக்கச் சொன்னான்.
தன்னையே கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும் சித்தரித்துக் கொள்ளும் சாய்பாபா, சில நாட்களாக மருத்துவ உபகரணங்களின் துணையோடு படுத்த படுக்கையாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு  தந்தை பெரியார் பாசறையில் பயின்ற பழுத்த பகுத்தறிவுவாதியான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாய் பாபா உடல்நலம் தேற செய்தி அனுப்புகிறார். அதுவும் எப்படி, உங்களுடைய பக்தகோடிகளின் வேண்டுதல்படி என்று. இவரை என்னவென்று சொல்வது? இவருடைய பகுத்தறிவு எங்கு போனது? சாய்பாபாவின் வாயிலிருந்து (மறைத்து வைத்து எடுக்கப்பட்ட) வந்த லிங்கத்தைச் சூழ்ந்திருக்கும் எச்சிலாகிவிட்டாரே.

No comments: